2021-10-21

தமிழ் விடுகதைகள்

விடுகதைகள் – பகுதி 1

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்

2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு

8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி

9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய் 


விடுகதைகள் – பகுதி 2


1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி

2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு

3. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள்

4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை

5. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்

6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்

7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு

8. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்

9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்

10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள் 


விடுகதைகள் – பகுதி 3

1. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண்

2. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?. ஆமை

3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை

4. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி

5. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்

6. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? கண் இமை

7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு

8. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்

9. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

10. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம் 


விடுகதைகள் – பகுதி 4

1. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம்

2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. கொசு

3. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசனிக்கொடி

4. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை

5. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி

6. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்

7. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை

8. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு

9. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்

10. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை 


விடுகதைகள் – பகுதி 5

1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? மஞ்சல்செடி.

2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம்

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு

4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? தேன்

5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? சிலந்தி

6. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி

7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு

8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு

9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி

10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? சிலந்தி 


விடுகதைகள் – பகுதி 6

1. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன? தேயிலை

2. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு

3. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு

4. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு

5. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை

6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ

7. நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன? பட்டு

8. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை

9. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன? தையல் ஊசியும் நூலும்

10. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? நாட்காட்டி 


விடுகதைகள் – பகுதி 7

1. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம்

2. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு

3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்? அணில்

4. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை

5. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? நெல்

6. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? தேங்காய்

7. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்

8. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை

9. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? மிளகாய்

10. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர் 


விடுகதைகள் – பகுதி 8

1. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்

2. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? நாற்காலி

3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்

4. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய்

5. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு

6. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில்

7. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா

8. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? மயில்

9. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? கோலம்

10. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம் 


விடுகதைகள் – பகுதி 9

1. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? விக்கல்

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான். கரன்டி

3. அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? வெங்காயம்

4. பாலிலே புழு நெளியுது. அது என்ன? பாயாசம்

5. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்? ஆறு

6. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? பஞ்சு

7. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை

8. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு

9. மழையில் பிறந்து வெயிலில் காயுது? காளான்

10. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? பந்து 


விடுகதைகள் – பகுதி 10 

1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? நாணயம்

2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? கண்

3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன? வேர்கடலை

4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? வத்தல் மிளகாய்

5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்? கடிகாரம்

6. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது? சீப்பு

7. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? தென்னை

8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்? அருவி

9. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? சுண்ணாம்பு

10. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்

விடுகதைகள் – பகுதி 11

1. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? பென்சில்

2. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? மின் விசிறி

3. வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? உழுந்து

4. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? நாக்கு

5. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ? தேங்காய்

6. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலி பெட்டி

7. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி

8. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? பாம்பு

9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? அஞ்சல் பெட்டி.

10. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன? சூரிய காந்தி

விடுகதைகள் – பகுதி 12

1. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? கிளி

2. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? நிலா

3. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர்

4. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? அம்மி குளவி

5. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன? மூக்கு

6. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ? சந்திரன்

7. உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன? அன்னாசிப் பழம்

8. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன? நாக்கு.

9. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுத்திரிவத்தி

10. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன? நாய்
 

விடுகதைகள் – பகுதி 13

1. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? மழை

2. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? ரயில்

3. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன? முடி

4. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? விறகு

5. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம்

6. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்? நெருப்பு

7. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது? செருப்பு

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான். செருப்பு

9. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன? மேகம், மழை.

10. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன? அம்பு.

விடுகதைகள் – பகுதி 14

1. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ? இதயம்

2. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம்

3. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? தேங்காய்

4. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள்

5. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை? ஆபத்து

6. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? மஞ்சள்

7. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? தலை முடி

8. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? பணியாரம்

9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில்

10. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன? வெண்டைக்காய்

விடுகதைகள் – பகுதி 15

1. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? தலையணை

2. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? நண்டு

3. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன? இதயம்

4. நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்? நாளை

5. கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன? முதுகு.

6. கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன? சோற்றுப்பானை-சோறு.

7. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன? தீக்குச்சி

8. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன? வெண்டைக்காய்

9. அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி

10. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? நத்தை

விடுகதைகள் – பகுதி 16

1. அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன? அப்பளம்

2. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? பனம்பழம்

3. முயல் புகாத காடு எது? முக்காடு

4. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? இளநீர்

5. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்? பென்சில்

6. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி

7. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? காளான்

8. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? தற்கொலை

9. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்

10. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு.

விடுகதைகள் – பகுதி 17

1. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? சிலந்தி

2. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? முதுகு

3. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும்

4. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? மாதுளம்பழம்

5. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.

6. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? இரகசியம்

7. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு

8. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்

9. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்

10. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை

விடுகதைகள் – பகுதி 18

1. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? கல்வி

2. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன? இடியாப்பம்

3. “தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன? கப்பல்கள்”

4. “தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? எழுமிச்சம்பழம்”

5. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? கடிகாரம்

6. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன? நெருப்பு

7. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன? தீக்குச்சி

8. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன? வேம்பு

9. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி

10. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன? புடலங்காய்

விடுகதைகள் – பகுதி 19

1. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? அன்னாசிப்பழம்

2. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன? மூச்சு

3. “சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன? வாழைப்பழம்”

4. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? வளையல்

5. “வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன? விமானம்”

6. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? கடிதம்

7. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்? எறும்பு

8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்? தென்றல்

9. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? வியர்வை

10. “காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன? முட்டை”

விடுகதைகள் – பகுதி 20

1. “காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன? சேவல்”

2. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று

3. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? கத்தரிக்காய்

4. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன? இளநீர்

5. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்? நிலா

6. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ? மத்து

7. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகை

8. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? சாம்பிராணி

9. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ? தலையணை

10. “நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன? அச்சு வெல்லம்”

விடுகதைகள் – பகுதி 21

1. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன? விளக்கு

2. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்

3. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்? கா‌லி‌ங்பெ‌ல்

4. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன? வானம்

5. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன? ரத்தம்

6. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன? உளுந்து

7. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன? தீபம்

8. “காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன? வானம்”

9. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன? தீ‌க்கு‌ச்‌சி

10. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன? துத்தநாகம்

விடுகதைகள் – பகுதி 22

1. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? மழை

2. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? மஞ்சள்

3. “காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன? தவளை”

4. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? கண்ணீர்

5. “நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்? வெங்காயம்”

6. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? உப்பு

7. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன? தீக்குச்சி

8. “நடலாம், பிடுங்க முடியாது அது என்ன? பச்சை குத்துதல்”

9. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை? எறும்புகள்

10. “ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? ஊதுபத்தி”

விடுகதைகள் – பகுதி 23

1. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன? நெருப்பு

2. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன? க‌ண் இமை

3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ? மெட்டி

4. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன? வாழை

5. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ? தலை வகிடு

6. “வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன? மயில்”

7. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன? மதி

8. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? உப்பு

9. “வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? கத்தரிக்கோல்”

10. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்? இள‌நீ‌ர்

விடுகதைகள் – பகுதி 24

1. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? மரம்

2. “காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்? கொக்கு”

3. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ? ஊசி

4. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன? ஈ

5. “ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்? துடைப்பம்”

6. “கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன? மின்விசிறி”

7. “நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்? அன்னம்”

8. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ? தேனீ

9. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன? எறு‌ம்பு

10. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன? நெருப்பு

விடுகதைகள் – பகுதி 25

1. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன? உப்பு

2. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன? சேவல்

3. “சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன? கிளி”

4. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன? உரோமம்

5. “காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்? பாம்பு”

6. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ? தேன்

7. “சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன? பப்பாளி விதைகள்”

8. “காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன? சேவல்”

9. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன? சங்கு

10. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன? குடை

விடுகதைகள் – பகுதி 26

1. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? புல்லாங்குழல்

2. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? குளிர்

3. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி

4. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ? வாழைப்பூ

5. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? தேன் கூடு

6. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்? அமைதி

7. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன? தண்ணீர்

8. “நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்? கைகாட்டி”

9. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? அன்னாசிப்பழம்

10. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன? காட்ஸ்

விடுகதைகள் – பகுதி 27

1. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி

2. “மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? பஞ்சு”

3. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன? சட்டை

4. “கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன? கரும்பு”

5. “மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன? ஒட்டகம்”

6. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ? வானொலிப் பெட்டி

7. “சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன? கொசு”

8. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ? காற்று

9. “கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன? தேங்காய்”

10. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

விடுகதைகள் – பகுதி 28

1. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன? முட்டை

2. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்? பம்பரம்

3. “காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? முள்”

4.

5. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன? பாம்பு

6. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன? சூரியன்

7. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன? முருங்கைமரம்

8. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ? துவாரம்

9. “தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன? தொட்டா சுருங்கிச் செடி”

10. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன? கொடி

விடுகதைகள் – பகுதி 29

1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? நிலா

2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? பெட்ரோல்

3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? இதயம்

2017-02-12

அழகு மயில்

அழகு மயில் ஆடுது
ஆனந்த மாய் ஆடுது
தோகை மயில் ஆடுது
தோகை விரித்து ஆடுது

வண்ண மயில் ஆடுது
வானம் பார்த்து ஆடுது
வந்து நீங்கள் பாருங்கள்
வாழ்த்துக் கூறி ஆடுங்கள்.

-   கவிஞர். த. துரைசிங்கம்

வாகனங்கள்


சல்சல் வண்டி மாட்டுவண்டி
சவாரி போகும் மாட்டுவாண்டி
பூம்பூம் பூம்பூம் மோட்டார்க்கார்
போகுது தெருவில் மோட்டார்க்கார்

றிங்றிங் றிங்றிங் சயிக்கிள் வண்டி
இரண்டு சில்லு சயிக்கிள் வண்டி
சிக்குப்புக்கு சிக்குப்புக்கு புகைவண்டி
சீக்கிரம் செல்லும் புகைவண்டி

பயணம் நாமும் சென்றிடவே
பற்பல வண்டிகள் இன்றுண்டு
பற்பல இடங்களைப் பார்த்திடுவோம்
பத்திர மாகச் சென்றிடுவோம்.

   -கவிஞர். த. துரைசிங்கம்

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து.
ஐயம் புகினும் செய்வன செய்.
ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ஆத்திசூடி

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஔவியம் பேசேல்.
அஃகம் சுருக்கேல்

ஔவைக் கிழவி

ஔவைக்கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி

கூழுக்காகக் கவி பாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே